Wednesday, June 22, 2011

ஜெவுக்கு நன்றி! – நாம் தமிழரின் பிரமாண்ட சைதைப் பொதுக்கூட்டம

ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என அழைப்பதற்கு பெறுமைப்பட வேண்டும்: சீமான்.

ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,

இலங்கை அதிபர் ராஜபசேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர். தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.

ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இலங்கையில் நடந்த இறுதிப்போர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே மட்டும் நடைபெறவில்லை.

இலங்கைக்கு ஆதரவாக 20 நாடுகள் போர்க்களத்தில் நின்றன. லிபியா நாட்டில் ஒரு பிரச்சினை என்றதும் அங்குள்ள மக்களுக்காக அமெரிக்காவும், மற்ற நாடுகளும் ஓடோடிச் சென்றன. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை.

சட்டமன்ற தேர்தலின் போது இரட்டை இலை துளிர்த்தால் ஈழம் மலரும் என்று நான் பிரசாரம் செய்தேன். பலர் என்னை பார்த்து ஏளனம் செய்தார்கள். இன்று நாம் நினைத்தது போல, ஜெயலலிதா முதல் அமைச்சராகி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

8 கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதல் அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத் தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார். துணிச்சல் மிக்க பெண்மணி அவர்.

இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம். அவரது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.

புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பொறுத்தவரை எந்த காரியத்தில் இறங்கினாலும் அதனை நிறைவேற்றாமல் விடமாட்டார். தமிழ் ஈழத்தையும் அவர் பெற்றுத் தருவார். இதற்காக இறுதிவரை நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசும்போது,

நான் இந்த நாம் தமிழர் மேடையில் ஏன் ஏறியிருக்கிறேன் என்று நினைப்பீர்கள். நாம் தமிழர் மேடை மட்டுமல்ல. ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன்.

ஈழப்பிரச்சனையைக்கு மட்டும் ஏன் தொடர்ந்து குரல் கொடுக்கிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். மற்ற பிரச்சனைகளை பேச நிறைய அமைப்புகள் இருக்கின்றன.

ஆனால் ஈழ மக்களுக்கு குரல் கொடுக்க சில அமைப்புகள் தான் இருக்கின்றன. அதனால்தான் அந்த சில அமைப்புகளோடு கைகோர்த்திருக்கிறேன்’’ என்று பேசினார்.

மேலும், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்று வீரம் மிக்கவர் ஜெயலலிதா தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமானும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், இரட்டை குழல் துப்பாக்கிகள்.

தமிழ் ஈழம் மலர முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம் என்று சத்யராஜ் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் மணிவண்ணன்,

இலங்கை தமிழர்களுக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் வரவேற்கத்தக்கது. ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் தைரியத்துடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தேர்தலின் போது எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி செயல்பட்டது.

சீமான் ஒருவர் தான் இலங்கை தமிழர் பிரச்சினைகளை பற்றி பேசினார். எனவே தமிழர்கள் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் அங்கு கப்பலை இயக்குகிறது. இதில் ஏறி நாம் எப்படி பயணம் செய்ய முடியும் என்றார் மணிவண்ணன்.

கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இலங்கையில் தமிழினத்தை அழித்த அதிபர் ராஜபக்சே உள்ளிட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, அதனடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வழங்கிய மனுவிலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு முதல்வருக்கு வலியுறுத்துகிறோம். சமீபத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு கொழும்பு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து கருத்து கேட்டதற்கு, “ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனம் செய்ய இந்தியா அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

இதற்கு இலங்கை அரசை தனிமைப்படுத்த மாட்டோம் என்பதே பொருள். எனவே மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் தலைவர்களிடமும், இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றுமாறு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

தூத்துக்குடி – கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழினம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. பொருளாதார புறக்கணிப்பை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம், தமிழக வணிகர்கள் யாரும் அந்நாட்டுடன் வணிகம் செய்யக்கூடாது, இலங்கை விமான சேவையை புறக்கணிப்போம், தமிழ் திரைத்துறை மட்டுமின்றி, இந்திய திரைப்பட கலைஞர்களும் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்த நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.

இதற்காக முதல்-அமைச்சரும் பொதுவானதொரு வேண்டுகோள் விடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் வரவேற்கிறோம். அதோடு, இருநாடுகளுக்கிடையேயான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய – இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிப்பது அவசியம் என கருதினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம். உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வியை பொறுக்க முடியாமல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

பொதுக்கூட்டம் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் கூட்டத்தினர் கலையாமல் இறுதி வரை காத்திருந்து சீமான் பேச்சை கேட்டனர்.


















No comments:

Post a Comment