Sunday, March 13, 2011

.
திமிங்கிலம்
ஆழ ஆழ அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!
(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.

கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும் . அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இன மானத்திற்கான கருத்தை பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே ,பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

seeman050208_1
இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர்,விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். புதுவையில் அண்ணன் சீமானை காண புறப்பட்ட போது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலை தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர்,பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது. தமிழ் பெரியவர் இறைக்குருவனார் , இயக்குநர் அமீர், மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.
நான் சிறை வெளி வாயிலில் இருந்த வாயிற் காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன்.மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்ட போது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலை பேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில் , என்னை பேச சொல்லி அலை பேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார்.மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்
பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலைநீடித்தது.ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன.பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்து பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.
எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர் .தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களை பெற்று என்னிடம் அளித்தார்.தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.
சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். நானும் ,வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.
நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து,அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை. இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வு வயப்பட்ட நிலையில் இருந்தேன்.
அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும் ,வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களை தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானை பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம். எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும் ,வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்து பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.
இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம். ஆனால் நிபந்தனை..புத்தகங்கள் கொடுக்க கூடாது.வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார். …
என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்….அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் ..இனத்திற்காக,இன அழிவினை கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனை பார்த்து விடுவோம்..மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்…எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன
இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இருப்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது.
உள்ளே மங்கலான வெளிச்சம்.வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில் ..வாருங்கள் வழக்கறிஞர்களே…என்ற குரல்..
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ…என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ..பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ….மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ …
அதே குரல்…
குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா..அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன..தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.
அங்குதான்..
தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார்..
நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்..இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன்.ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம் ..பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.
ஒரு சிறைச்சாலையில்… சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ ,அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ… இருக்க முடியவில்லை.மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து…எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப் பட்டு…மீறி எழும் இனமான உணர்வினையும் ..சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்…சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்…அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.
என் புலன்கள் என்னையும் மீறி…ஆதிச்சுழியாய்..சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன் .அண்ணனும் கலங்கி..நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.
அப்பா ..எப்படியிருக்கார்..திமுக காரர் ..அவரிடம் வம்பு வளர்க்காத..பாவம் டா அவரு..என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்..அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா…தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.
எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை ,கலங்குவதை கவனித்துக் கொண்டும் ,பதிவு செய்துக் கொண்டும் இருந்தன…
நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.
சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்துக் கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன்.விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.
வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்ன போது அவரின் முகம் இறுகியது.
சுற்றி நின்ற காவலர்களை பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னை பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள் …அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை..பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள்.இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்க கூட எனக்கு அனுமதியில்லை ..ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.
அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான்.எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர்.அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.
இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர்,உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்..ஏன் அனுமதி ,மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்ட போது அவர்களிடம் பதிலில்லை.
எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.
அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார்.அந்த தாளை என்னிடம் அளித்து கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார்.நானும் அதை பெற்று மடித்த போது ..மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.
நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர் . அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம்.வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்க பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.
வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும்,உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.
என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார் .மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்..நீங்கள் எங்களுக்கு வேண்டும்..கொள்கையாய்..வழிகாட்டியாய்..ஆசானாய்..உறவாய் என்றேன்..
கண்டிப்பாக..என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.
சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.
தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.
எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்,,,தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது. காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர்.மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்…ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?
விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்….அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா…இந்த நாட்டில் துரோகி கருணாவை பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்பி தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர ..சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு..
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே…
தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே..
காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே…
ஏனய்யா …உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது..
அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..?
அவனின் உண்மையும் ,தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது?
அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?

.
வண்டி கிளம்பியது.
கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன்.
காற்று வேகமாக வீசியது..
அந்த காற்று …சிறை மதிற் சுவர்களை தாண்டியும் வீசும்..
காற்றை கைது செய்ய முடியுமா என்ன?.

யார் இந்த முத்துக்குமார் எதற்காக இந்த படுகொலைகொலையாளிகள் யார்..?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நக்கீரன் தான் சொன்னது. அதன் பிறகு சீமான் பாதுகாப்பாக இருப்பதாக நக்கீரன் பேட்டியிலும் சொல்லி இருந்தார்.



ஆனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்போம் என்றும் பேசி வருகிறார். இந்த நிலையில் தான் சீமானின் கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து வரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை சுபா. முத்துக்குமார் பிப்ரவரி 15 ம் தேதி புதுக்கோட்டை இதய பகுதியான அண்ணாசிலை அருகே சுழல் கேமரா கண்காணிப்பு, போலிஸ் பாதுகாப்பு, பொது மக்கள் நடமாட்டத்தையும் கடந்து மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



20 நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்கவில்லை என்று புதுக்கோட்டை போலிஸ் சொல்லி வாய்தா வாங்கிக் கொண்டு தேடுவது போல தேடுகிறது. மார்ச் 20 ம் தேதிக்குள் கொலையாளிகளை பிடிப்போம் என்று சொல்லும் போலிசுக்கு நாம் தமிழர் சீமான் பகிரங்க போராட்ட அறிவிப்பையும் விட்டுள்ளார். 20 ம் தேதிக்கு பிறகு கோட்டை முற்றுகை முதல் மாநிலமே நடுங்கும் விளைவுகளை போலிஸ் சந்திக்கும் என்பது தான் அந்த அறிவிப்பு.

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்..?

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சொந்த ஊராக கொண்ட முத்துக்குமார் 18 வயதில் விடுதலைப்பபுலிகள் இயக்க தொடர்பு ஏற்பட்டு அங்கிருந்து இயக்க பயிற்சிக்கு இலங்கை சென்று 4 ஆண்டுகள் பயிற்சி முடித்து புதுக்கோட்டைக்கு வந்து பாவாணன் வீட்டில் தங்கி கொண்டு கோட்டைபட்டிணம், ஜெகதாப்பட்டிணம், மணமேல்குடி ஆகிய கடற் தளங்களில் இருந்து பெட்ரோல் , டீசல் , ரத்தம் , உணவு , மருந்து போன்ற பொருட்களை கடல் மார்க்கமாக கடத்தி விடுதலைபுலிகளுக்கு கொடுத்து வந்தார்.

1994 ஆகஸ்ட் 15 வேலூர் கோட்டை முகாமில் தங்கி இருந்த 80 விடுதலைப்புலிகளை தப்பவைக்க சென்னை சிறையிலிருந்த ரோமியோவுக்கு இயக்கம் உத்தரவிட்டது.

ரோமியோ திட்டம் வகுத்து கொடுக்க 90 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி முடிக்கும் போது சில இடங்களில் சுரங்கம் இடிந்ததால் 48 புலிகள் மட்டும் தப்பினார்கள். இதில் சிலர் நீச்சல் தெரியாமல் அகலியில் சிக்கிக்கொள்ள 28 பேரை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தார் முத்துக்குமார்.

1995 ல் சென்னை மத்திய சிறையில் இருந்த ரோமியோ உள்பட 9 புலிகள் தப்பிக்க இயக்கத்தின் உத்தரவு கிடைக்க 9 பேரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோமியோ உள்பட 5 பேர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பொருப்பு முத்துகுமாருக்கும் 4 பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பொருப்பு சென்னை நபர் ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. முத்துக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும் பாதுகாப்பாக ஈழம் கொண்டு சேர்த்தார். இவர் கொண்டு சேர்த்த ரோமியோ தான் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மெய்காப்பாளரா இருந்தார்.

ஆனால் சென்னை நபரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரில் தப்பிக்கும் போது 2 பேர்கள் பிடிபட்டனர். நிலத்திலும், நீரிலும் ஓடும் எஞ்சினை கண்டுபிடித்த குட்டி என்பவர் மட்டும் குதிக்கும் போது கால் ஒடிந்தது. மீண்டும் போலிசிடம் சிக்கிவிடக்கூடாது என்று குட்டி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் ஏரியில் குதித்து இறந்தார்.

இதனால் அந்த சென்னை நபர் மீது உளவாளி என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு இயக்க வேலைகள் எதுவும் அந்த சென்னை நபரிடம் கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்போதிருந்தே முத்துக்குமார் மீது தீராப் பகை கொண்டார் அந்த சென்னை நபர். இருவருக்கும் நேருக்கு நேர் கருத்து மோதல் ஏற்பட்டு ஒருகட்டத்தில் போட்டு தள்ளிடுவேன் என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

யார் முந்திக் கொண்டு யாரை போடுவது என்ற அளவில் பகை முற்றியது. துண்டு பிரசுரத்தில் இப்போது சொல்லப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்த சென்னை நபர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

1996 ல் மணமேல்குடியில் முதல் கடத்தல் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தடா வழக்கு பதிவாகிறது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போது தான் கூடயிருந்த தமிழ்நாடு விடுதலைப்படை நல்லரசன் தொடர்பு ஏற்பட்டு அந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

இந்த நிலையில் தான் திருவாரூர் நபர்களின் நட்பும் கிடைத்தது. ஆனால் இந்த நபர்களுடன் அந்த சென்னை நபர் கூட்டாளிகள் என்பதுடன் ஒரே இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து வெளியே வந்த முத்துகுமார் தன்னிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட கிரனட் என்கிற கை எறிகுண்டை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி திருவாரூர் நபரிடம் கொடுத்திருந்தார். அதன் பிறகு வீரப்பனிடம் காட்டுக்கு செல்லும் போது அந்த கிரனட் குண்டுகளை முத்துகுமார் கேட்க அந்த குண்டுகள் அவரிடம் இல்லை.

அந்த குண்டுகளை ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பிடம் கொடுத்துவிட்டார் திருவாரூர் நபர். இந்த குண்டுகள் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முரளி சென்ற ஜீப் மீது திருச்சியில் வைத்து வீசப்பட்டது. இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது.

ஜாதி, மதம் இல்லை என்று சொல்லும் இயக்கத்தில் இருக்கும் திருவாரூர் நபர் எப்படி தன் மத தீவிரவாதிகளுக்கு குண்டுகளை விற்றார் என்று பிரச்சணையை இயக்க தலைமை வரை கொண்டு போனதால் திருவாரூர் நபரை அவர் சார்ந்திருந்த இயக்கம் கேள்வி கேட்டது. இந்த நேரத்தில் சென்னை நபரும், திருவாரூர் நபரும் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால் முத்துக்குமாருக்கான பகை ஒன்று இரண்டானது.

தமிழ்நாடு விடுதலைப்படையில் இணைந்து செயல்பட்ட போது அணைக்கரை மாறன் குரூப், சுப. இளவரசன் குரூப் என்று இரண்டாக உடைந்தது. முத்துக்குமார் மாறன் குரூப்பில் இருந்தார். இளவரசன் குரூப்பில் இருந்த வல்லம் அறிவழகன் கொலையில் மாறன் கும்பல் கைதானது. அப்போது முத்துகுமார் சிறையில் இருந்தார்.

ஆனால் அறிவழகனை போட மூலையாக செயல் பட்டது முத்துகுமார் தான் என்று அந்த குரூப் நினைத்தது. இதனால் பல முறை முத்துக்குமாரை போட முயற்சியும் செய்தது இளவரசன் குரூப். இந்த இளவரசன் குரூப்பும் அந்த சென்னை நபர், திருவாரூர் நபர் ஆகியோரும் இணைந்து முத்துகுமாரை பொது எதிரியாக பார்க்க தொடங்கினார்கள்.

1999 முதல் 2006 வரை சிறை வாழ்க்கை. இந்த காலக்கட்டத்தில் திருச்சி சிறையில் மணல்மேடு சங்கர் ஆட்களும் உள்ளே இருக்க முத்துக்குமார் ஆட்களுடன் மோதல் உருவாகி பெரிய சண்டை நடந்தது.

தலித் கைதிகள் முக்குலத்தோர் கைதிகள் என்று பிரிந்தனர். இதை பயன்படுத்தி முத்துகுமாரை உள்ளேயே முடிக்க திட்டமிட்டது அந்த மூவர் கூட்டனி. இதற்கு மணல்மேடு சங்கர் ஆட்களை பயன்படுத்த நினைத்தார்கள். அப்போது அந்த சிறையில் இருந்த சங்கரின் ஆளான கபிரியேலுக்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்த கடிதத்தில் பூனைக்கு மருந்து கொடுத்து விட்டோமே இன்னும் கொடுக்களையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் முத்துகுமார் ஆட்களின் கையில் சிக்கியதால் கபிரியேலை “கவனித்து” கேட்க அப்போது தான் தன் அறையில் இருந்து ஒரு பேனா மூடியை எடுத்து கொடுத்தான் கபிரியேல் அதில் சயனைட் இருந்தது. முத்துகுமார் சாப்பாட்டில் இந்த சயனைட் கலக்க சொல்லி கொடுத்தாங்க சமையல்காரனை சரிபண்ண பேசிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இந்த கடிதம் வந்து மாட்டி விட்டது என்றான். அதன் பிறகு தான் கபிரியேல் சிறை மாற்றப்பட்டான்.

இந்த நேரத்தில் தான் திருவாரூர் நபரின் ஆட்கள் முத்துக்குமாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை பேப்பர் சேகரித்து இப்போது வெளியாகியுள்ளது போல கையால் எழுதி சிறை முழுக்க படிக்க பரவ விட்டனர். இப்படியாக இந்த முத்துக்குமாரை பல்வேறு குரூப்புகளும் டார்கெட் வைத்து செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கொள்கையுடன் களமிறங்க அதில் தன்னையும் இணைத்து கொண்டு தீவிரமாக கட்சி பணி செய்தார். சுப. இளவரசன் குரூப்பில் இருந்து முத்துகுமாரை எதிர்த்த சிலரும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொருப்புக்கு வந்தனர். பொருப்புக்கு வந்தவர்கள் பழைய பகைமையுடன் தான் பார்த்தனர்.

போன மாதம் சென்னையில் ஒரு திருமணத்திற்கு போன முத்துக்குமார் கட்சி பிரமுகரிடம் தங்க இடம் கேட்டார். அந்த கட்சி பிரமுகர் தன் வீட்டின் மாடியில் தங்கி கொள்ளுங்கள் என்று தங்க வைத்தார். அதிகாலையில் முத்துகுமார் எழுந்து போய்விட்டார்.



முத்துகுமாருக்கு துணைக்கு வந்தவர் கீழ் அறையில் உள்ளவர்கள் யார் என்று எட்டி பார்த்து அதிர்ச்சி ஆனார் கீழ் அறையில் இருந்தவர்கள் சுப.இளவரசன் ஆட்கள். அதே பயத்துடன் முத்துகுமாரை இங்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் துணைக்கு வந்தவர். அதே போல டெல்டா மாவட்டத்தில் சீமான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் 4 பேர் இளவரசன் ஆட்கள் சுற்றி வந்துள்ளனர்.

இந்த துண்டுபிரசுரம் வெளியான நாளில் இருந்து சோர்வாக காணப்பட்டவர் இதை அந்த சென்னை நபர் தான் எழுதியிருக்கான் துணைக்கு வடகாடு ஆள் யாரோ இருந்திருக்கான் அவன் யார் என்று கண்டுபிடிக்கனும் என்று சொன்னவர். வடகாடு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு மனு ரசீதும் வாங்கியுள்ளனர்.

துண்டுபிரசுரம் வெளியான நாளில் அந்த முக்கிய கட்சி பிரமுகர் மட்டும் தனியாக புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். எதிர்பாராமல் முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அமைதியாக பேசிக் கொண்டிருந்தவரிடம் கூட்டனி பற்றி நான், சீமான், எம்.என், ஆகியோர் தனியாக சந்திக்க வேண்டியுள்ளது. எப்ப, எங்கே சந்திக்கிறது என்று உடனே சொல்லுங்கள் காலம் கடத்த வேண்டாம் என்று முத்துக்குமார் சொல்ல நாளை இடம், நேரம் குறிச்சுகிட்டு சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனவர் செவ்வாய் கிழமை அந்த பிரமுகர் ப்ரியாக இருந்தும் கூட முத்துகுமாரிடம் மட்டும் கடைசிவரை பேசவில்லை. அ.தி.மு.க பக்கம் போக கூடாது என்று தடுத்தவர்களில் இந்த பிரமுகரும் ஒருவர்.

இந்த நேரத்தில் தான் மாலையில் வழக்கறிஞர்களுக்கு ஓட்டு கேட்டு வழக்கறிஞர்கள் கார்த்தி, ரஜினி ஆகியோர் முத்துகுமாரை சந்தித்து கை கொடுத்தனர். இவர்கள் கூட 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

மேலே நாம் சொன்ன எல்லா குரூப்புகளுமே முத்துகுமாரை போட வேண்டும் என்று அழைந்தவர்கள் தான். இதில் பலரின் துணையோடு திருவாரூர் நபரின் டீம் தான் போட வந்தது என்பது தெரியவருகிறது.

இந்த நிலையில் சீமான் கூட இருக்கும் அந்த பிரமுகர் எல்லாரும் என்னை சந்தேகப்படுறாங்க ஆனா இதுல எனக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

தோழர்கள் சொல்வது என்ன?

முத்துக்குமாரின் கூட இருந்த தோழர்கள் இந்த துண்டு பிரசுரம் திசை திருப்பும் விதமாக எச்சரிக்கை கடிதமாகத் தான் போட்டிருக்காங்க. இந்த பிரசுரத்தை இயக்க தொடர்பு உள்ளவன் தான் எழுதியிருக்கான். இதில் மத்திய உளவுப்பிரிவின் பங்கும் இருக்கலாம். தொடக்கத்தில் இயக்கத்தில் இருந்த போது போலிஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு தான் இயக்கத்துக்கு தேவையான பொருள், ஆட்களை கொண்டு போனார். அப்பறம் தமிழர் விடுதலைப்படையில இருந்து சிறப்பா செயல் பட்டார். காட்டுக்கு போனார். எல்லாத்துக்கும் வழக்கு போட்டாங்க. எல்லா வழக்குகளையும் உடைச்சு வெளியே வந்தார். கொஞ்ச நாள் சும்மா இருந்தார்.

இறுதிகட்ட போர் நடக்கும் போது முழுமையா ஈழத்துக்கு மருந்து கொண்டு போய் கொடுத்ததும் முத்துக்குமார் தான். ஒருமுறை மட்டும் கார் விபத்தாகி பொருள் அனுப்ப தாமதமாகிடுச்சு. இருந்தும் கடைசிவரை மருந்து அனுப்பினார். கடைசியில் இயக்கம் பின்னடைவு ஏற்பட்டதும் ரொம்ப கவலைப்பட்டார்.

இப்ப நாம் தமிழர் கட்சில இணைந்து செயல்பட தொடங்கிட்டார். நிறைய இளைஞர்களை கட்சியில சேர்த்து வந்தார். மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்கு தொல்லை தான் என்று நினைச்சு தான் எப்பவோ மருந்து கடத்தினதுக்கு போன வருடம் வழக்கு போட்டாங்க. இனி மேலும் வழக்கு போட்டு முடக்க முடியாதுன்னு தெரிந்து கொண்டு தான் அவங்களுக்கு வேண்டிய இயக்க ஆட்களை வச்சு போட சொல்லி செஞ்சும் முடிச்சுட்டாங்க மத்திய உளவு பிரிவினர் என்றும் வெளியில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மிரட்டல் கடிதங்கள் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. முத்துக்குமார் கொலைக்கு மட்டுமல்ல புதுக்கோட்டையில் நடக்கும் எந்த கொலைக்கும் இன்னும் சரியான பதில் கிடைக்க வில்லை தான்.

பெட்டி செய்தி:

ஒரு மாதம் முன்பு ஜெகதாப்பட்டிணம் மீனவர் பாண்டி சிங்கள கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட மறுநாள் இறங்கல் கூட்டத்தில் முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்த போது அவரை மட்டுமே ஒரு கருப்பான உருவம் தனது செல்போனில் படம் எடுத்திருக்கிறது. அவர்கள் அதை கவணிக்கவில்லை.

ஆனால் அந்த உருவத்தை வேறு ஒருவர் கவனித்து போட்டோ எடுத்ததும் பதறிக் கொண்டு ஓடியது அந்த உருவம். பாண்டி புதைக்கப்பட்ட பிறகு நீங்கள் யார் என்று அந்த கருப்பு உருவத்தை பார்த்து கேட்க நான் ஐ.பி சென்னை.

முத்துக்குமாரை சும்மா படம் எடுத்தேன் என்று சொல்லி தப்பி இருக்கிறார். அந்த நபர் ஐ.பி தானா? என்பது தெரியாது. ஆனால் முத்துகுமார் ஒரு மாதம் முன்பிருந்தே கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

Wednesday, March 9, 2011

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.

உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!

உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.

எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.

யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.

அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.

முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.

ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!

ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!

உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.

உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு. 'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?

அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!

திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும். அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?

போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!

சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும். சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.

உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!

இப்படிக்கு,

நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்

என்ற நம்பிக்கையுடன்,

தமிழருவி மணியன்

Monday, March 7, 2011


கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.

காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!

ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது – உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!

ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? ‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. ‘அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி – 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். ‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! ‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? ‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று ‘நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்


நன்றி : விகடன்